Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

புனித வேதாகமத்தின் வரலாறு bible histroy

சகோ.M.S.வசந்தகுமார்
இன்று உலகிலேயே அதிகளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகமாக இருப்பது பரிசுத்த வேதாகமம் மட்டுமேயாகும். 1982 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி, உலகின் 275 மொழிகளில் முழுமையான வேதாகமமும், 495 மொழிகளில் புதிய ஏற்பாடும், 940 மொழிகளில் வேதாகமத்தின் சில பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதன்படி, 1982 இல் மொத்தம் 1710 மொழிகளில் வேதாகமம் இருந்துள்ளதை அறிகின்றோம். இன்று இதைவிட அதிகமான மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, இன்னும் பல புதிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றது.
1992 ஆம் ஆண்டு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கோட்டே டீ ஐவெயர் இன் மொழியான பீட்டேடலோவா என்னும் மொழியில் மாற்கு எழுதின சுவிசேஷம் வெளியிடப்பட்டபோது, வேதாகமப் புத்தகங்களின் மொழி பெயர்ப்புகள் 2000 மொழிகளாக உயர்வடைந்துள்ளது. எனினும், இன்னும் 4500 மொழிகளில் வேதாகமத்தின் சிறு பகுதிகூட மொழிபெயர்க்கப்படாமல் உள்ளது. இன்றுவரை மொழி பெயர்க்கப்பட்டுள்ள வேதாகமங்களுள் முக்கியமானவற்றை இவ்வத்தியாயத்தில் பார்ப்போம்.
ஐரோப்பிய மொழிகளில் வேதாகமம்
அப்போஸ்தலனாகிய பவுல் முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராட்சியத்திலிருந்த பிலிப்பி என்னும் பட்டணத்தில் சபையை ஸ்தாபித்தபோது ஐரோப்பா கண்டத்திற்குச் சென்ற கிறிஸ்தவம், படிப்படியாக ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியமையினால் அப்பிரதேசத்து மக்களது மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்படத் தொடங்கியது. இவற்றுள் ஆரம்பகாலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேதாகமங்களின் வரலாற்றை 7 ஆம் அத்தியாயத்தில் ஏற்கனவே அறிந்துகொண்ட நாம், இப்போது பிற்கால மொழி பெயர்ப்புப் பணிகள் பற்றி பார்ப்போம்.
(1) ஜெர்மனிய மொழிபெயர்ப்பு
ஜெர்மனிய கோத்திரங்களுள், கோத்திக் மற்றும் பிரான்கிங் இனத்தவரது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமங்கள் பற்றி 7 ஆம் அத்தியாயத்தில் நாம் அறிந்து கொண்டோம். இவ்விரு ஜெர்மனிய கோத்திர இனத்தவரது மொழிகளில் மட்டும் அல்ல, இன்னும் சில ஜெர்மனிய கோத்திர மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, தற்சமயம் 200 இற்கும் அதிகமான இவற்றின் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன. 12 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சங்கீதப் புத்தகத்தைப் பலர் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துள்ளனர். 1350 இல் ஆக்ஸ்பேர்க் வேதாகமம் என அழைக்கப்படும் ஜெர்மனிய மொழியிலான புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1400 அளவில் டெப்வன்சிஸ் என அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் ஜெர்மனிய மொழி பெயர்ப்பு தயாரிக்கப்பட்டது. 1389 இற்கும் 1400இற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு வேதப் பிரதியில், பழைய ஏற்பாட்டின் பகுதிகளும் ஜெர்மனிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. ஜோஹான் மென்டல் என்பவரினால் வெளியிடப்பட்ட ‘மென்டல் வேதாகமம்’ என அழைக்கப்படும் வேதாகமமே, ஜெர்மன் மொழியில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமமாகும். 1466 இல் வெளிவந்த இவ்வேதாகமம் பிற்காலத்தில் 18 பதிப்புகள் பிரசுரிக்கப்பட்டது.
வேதாகம சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் வேதாகமம், சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூத்தர் மொழிபெயர்த்து வெளியிட்ட ஜெர்மன் மொழி வேதாகமமாகும். ஜெர்மனியிலுள்ள ஒரு செல்வந்த குடும்பத்தில் 1483 இல் பிறந்த மார்ட்டின் லூத்தர், 1505 இல் ஒரு துறவுமடத்தில் சேர்ந்து 1507 இல் ரோம சபையின் மதகுருவானார். இறையியல் கல்வியில் பட்டம் பெற்று வேதாகம விரிவுரையாளராகிய லூத்தர் வேதவாக்கியங்களை ஆராயும்போது, மனிதன் ரோம சபையின் சடங்காச்சாரங்களை செய்வதன் மூலமாக அல்ல, மாறாக, இயேசுகிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமே இரட்சிக்கப்படுவான் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டமையினால், அக்காலத்தைய ரோம சபையின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தொடங்கினார். இதனால், ரோம சபை அவரை எதிர்க்கத் தொடங்கியது. 1521 ஆம் ஆண்டு மே மாதம் முதல், 1522 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்புக்காகத் தன் நண்பர்களினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சமயம், மார்ட்டின் லூத்தர், எரஸ்மஸ் என்பவருடைய கிரேக்க வேதாகமத்தை அடிப்படையாய்க் கொண்டு ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். இது 1522 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விட்டன் பேர்க் எனும் இடத்தில் அச்சிடப்பட்டது. 1523 ஆம் ஆண்டில் மார்ட்டின் லூத்தரின் பழைய ஏற்பாட்டின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு பகுதி பகுதியாக வெளியிடப்பட்டது. 1534 இல் பழைய ஏற்பாடு, தள்ளுபடி யாகமங்கள், புதிய ஏற்பாடு உட்பட முழு வேதாகமமும் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. பிற்காலத்தில் மாட்டின் லூத்தரின் மொழிபெயர்ப்பு திருத்தி வெளியிடப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தருடைய மொழி பெயர்ப்பே பிரபல்யம் பெற்று விளங்கியதோடு, வேறு சில மொழி பெயர்ப்புகளுக்கு அடிப்படையான வேதாகமமாகவும் இருந்தது.
மாட்டின் லூத்தரின் காலத்தில் அவருடைய மொழிபெயர்ப்பிற்கு இணையான வேறு மொழி பெயர்ப்புகள் எதுவும் வெளிவரவில்லை. அக்காலத்தில் வேறு நபர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஜெர்மன் மொழி வேதாகமங்கள் மார்ட்டின் லூத்தரின் மொழி பெயர்ப்பின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தன. 1527 இல் ஹைரனி முஸ் எம்சர் என்பவர், ரோமன் கத்தோலிக்க சபைக்காக லத்தீன் மொழி பெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு மார்ட்டின் லூத்தரின் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட்டார். 1534 இல் ஜோஹான் டயட்டன்பேர்க் என்பவர் எம்சரின் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட்டார். இது மறுபடியுமாக 1630 இல் கஸ்பர் யுலென்பேர்க் என்பவரினாலும் 1662 இல் மானிஸ் என்னு மிடத்திலிருந்த போதகராலும் திருத்தப்பட்டு கத்தோலிக்க வேதாகமம் எனும் பெயரைப் பெற்றது. இதேபோல, வேறுசிலரும் லூத்தரின் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
1602 இல் ஜோஹான்னஸ் ஃபிஸ்ச்சர் என்பவர் முழுவேதாகமத்தையும் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். 1726 இற்கும் 1742 இற்கும் இடைப்பட்ட காலத்தில் லூத்தரது ஜெர்மனிய மொழி பெயர்ப்பையும், அக்காலத்தைய சில ஆங்கில மற்றும் சூரிக் மொழி பெயர்ப்புகளோடு ஒப்பிட்டு ஒரு திருத்தப்பட்ட ஜெர்மன் மொழி வேதாகமத்தை ஜோனஹன் ஹியூ என்பவர் 8 பகுதிகளாக வெளியிட்டார். பிற்காலத்தில் வேறு சிலரும் லூத்தரின் மொழி பெயர்ப்பைத் திருத்த முற்பட்டாலும், அவர்களது மொழி பெயர்ப்புகள் ஜெர்மனிய கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. 1863 இல் பல சபைகளையும் சேர்ந்த ஒரு குழுவினர் மார்ட்டின் லூத்தரது வேதாகமத்தைத் திருத்தும் பணியை ஆரம்பித்தனர். இவர்களது முயற்சி காரணமாக 1867 இல் புதிய ஏற்பாடும், 1883 இல் முழு வேதாகமமும் ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. இம்மொழிபெயர்ப்பு குறித்து மக்கள் தெரிவித்த கருத்துக்களை கவனத்தில் கொண்டு மறுபடியுமாக சில திருத்தங்கள் செய்யப்பட்ட புதிய ஜெர்மன் மொழி வேதாகமம் 1892 இல் பிரசுரிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் பல நவீன ஜெர்மன் மொழிபெயர்ப்பு வேதாகமங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் 1926 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஹேர்மன் மென்கே என்பவருடைய “மென்கே வேதாகமம்” முக்கியமானது. இது இருபது வருட கால முயற்சியினால் உருவான மொழிபெயர்ப்பாகும். பல தடவைகள் தனது மொழி பெயர்ப்பைத் திருத்திய ஹேர்மன் மென்கே, 1939 இல் தனது 97 ஆவது வயதில் திருத்தப்பட்ட தனது இறுதி மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்தார்.
இதன் பின்னர் 1956 இல், லூத்தரின் திருத்தப்பட்ட இன்னுமொரு ஜெர்மன் வேதாகமம் வெளியிடப்பட்டது. அண்மைக் காலத்தில் சில புதிய ரோமன் கத்தோலிக்க ஜெர்மன் வேதாகமங்களும் வெளிவந்துள்ளன.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular