Tamil christian song ,video songs ,message ,and more

வியாழன், 23 டிசம்பர், 2010

ஆபிரகாம் லிங்கன்


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த காலம். அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை அரசியல்வாதி ஒருவரைப் பிரியப்படுத்துவதற்காக ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த பெரும்பகுதியான ராணுவத்தினரை அந்த இடத்தைவிட்டு வேறு ஒரு இடத்திற்குச் செல்லும்படி உத்தரவிட்டார். யுத்த செயலாளரான எட்வின் ஸ்டான்டன் அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்துவிட்டார். அதோடு, ‘‘இப்படி உத்தரவைப் பிறப்பித்த ஆபிரகாம் லிங்கன் ஒரு முட்டாள்’’ என்றும் விமர்சித்தார். இது ஆபிரகாம் லிங்கனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட லிங்கன், ‘‘ஸ்டான்டன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் எப்பொழுதுமே காரியங்களை நிதானித்து அறிகிற புத்திக்கூர்மையுள்ளவர்’’ என்று பாராட்டினார். அவரை நேரில் சந்திக்க வருமாறு அழைத்தார்.

இருவரும் சந்தித்துப் பேசினார்கள். லிங்கனின் உத்தரவை செயல்படுத்த மறுத்த தன் நியாயமான காரணங்களையும், நிறைவேற்றியிருந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் விளக்கிச் சொன்னார் ஸ்டான்டன். லிங்கன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். ‘‘உங்கள் விமர்சனம் என்னை சரி செய்துகொள்ள உதவியது’’ என்று புன்னகையோடு சொன்னார்.ஆபிரகாம் லிங்கனின் மனப்பக்குவத்தை சிந்தித்துப் பாருங்கள். ‘ஜனாதிபதியான என் உத்தரவை நிறைவேற்றவில்லையே; என்னை மோசமான வார்த்தையால் விமர்சிப்பதா?’ என்ற ஆணவமோ, கோபமோ இன்றி எவ்வளவு சாந்த குணத்தோடும், மிகுந்த தாழ்மையோடும் அந்த சம்பவத்தைக் கையாண்டிருக்கிறார்! இவை அவருடைய ஆன்மிக உணர்வின் முதிர்ச்சியைக் காட்டுகின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது வாயிலாகவே தமது குணாதிசயத்தைச் சொல்லும்போது, ‘நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்’ (மத்தேயு 11: 29) என்று சொன்னார். ஆபிரகாம் லிங்கன் ஆண்டவருடைய வார்த்தையாகிய வேதாகமத்தை கருத்தோடு படித்து உணர்ந்ததால் அந்த வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும் செய்தார். ஆகவே அவர் உண்மையிலே இயேசு கிறிஸ்துவிடமிருந்து அவருடைய சுபாவங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்; அவற்றைத் தன் செயல்களில் பிரதிபலித்தார். கற்பதைவிட அவற்றை நடைமுறைப்படுத்துவதே மேன்மையானது.

நமக்கு விரோதமான விமர்சனங்களை நாம் சந்திக்கும்போது நமது பிரதி செயல் எப்படி இருக்கிறது? இயேசுவின் சுபாவத்தை பிரதிபலிக்கிறோமோ? அல்லது நம்முடைய சுய சுபாவத்தைப் பிரதிபலிக்கிறோமோ? அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்: ‘அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள்; கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ் செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்’ (தீத்து 1: 16).

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Categories

Popular